ஆந்திராவில் கல்வியறிவு 82.1 சதவீதமாக உயர்ந்ததாக கூறிய அமைச்சர் லோகேஷ் -ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் விமர்சனம்
அமராவதி , 04 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் கல்வியறிவு விகிதம் 2024-ம் ஆண்டு 72.6 சதவீதமாக இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு 82.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு முன்னா
A


அமராவதி , 04 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் கல்வியறிவு விகிதம் 2024-ம் ஆண்டு 72.6 சதவீதமாக இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு 82.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

ஆந்திராவின் கல்வியறிவு தொடர்பாக கூட்டணி அரசு தவறான தகவல்களை பரப்புவது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 2026-ம் ஆண்டு இன்னும் நிறைவடையாத நிலையில், அந்த ஆண்டுக்கான கல்வியறிவு விகிதம் தொடர்பான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எவ்வாறு வெளியாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்ட ‘பீரியாடிக் லேபர் போர்ஸ் சர்வே’ (PLFS) 2023-24 ஆண்டு அறிக்கையை ஜெகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, 2023-ம் ஆண்டு ஜூன் முதல் 2024-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில், ஆந்திராவில் 7 வயதுக்கு மேற்பட்டவர்களின் கல்வியறிவு விகிதம் 72.6 சதவீதமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதே விகிதம் 2018-19-ம் ஆண்டில் 69.1 சதவீதமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி வெளியிடப்பட்ட PLFS 2025 அறிக்கையின்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஆந்திராவின் கல்வியறிவு விகிதம் 71.4 சதவீதமாக பதிவாகியுள்ளதாக ஜெகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் இவ்வாறு இருக்கும்போது, 82.1 சதவீதம் என கூறுவது மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதுதவிர, ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாகவும் ஜெகன் கூறியுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் UDISE புள்ளிவிவரங்கள் இதனை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியை மேலும் எளிதாக கிடைக்கச் செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கு பதிலாக தவறான தகவல்களை வெளியிட்டு பிரசாரம் செய்வது வருத்தமளிப்பதாகவும் ஜெகன் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தனது துறையின் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், ‘ரெட் புக் கவர்னன்ஸ்’ மீது கவனம் செலுத்துவதை விட கல்வித்துறையின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஜெகன் அறிவுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA