வாழை பயிர்கள் கருகிய விவகாரம், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – வேல்முருகன்
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை: தூத்துக்குடி–திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் டிராக்டர்களைக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டதுடன், காய்ந்து கருகிய வாழை மரங்களை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது வேதனையளி
Velmurugan


Nn


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை: தூத்துக்குடி–திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் டிராக்டர்களைக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டதுடன், காய்ந்து கருகிய வாழை மரங்களை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது வேதனையளிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அணைகளில் போதிய அளவு தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், கடைமடை விவசாய நிலங்களுக்கு உரிய காலத்தில் பாசன நீர் சென்று சேராதது நிர்வாகத்தின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையும் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததும், நீர் பங்கீட்டு அட்டவணை முறையாக பின்பற்றப்படாததுமே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழைகள் கண்முன்னே கருகிப் போனதற்கு காரணம் என வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடன் வாங்கி, கடுமையாக உழைத்து வளர்த்த பயிர்கள் கருகியதால் விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதாகவும், அதிகாரிகளின் அலட்சியத்தால் உழவர்கள் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாய நிலத்தையும் வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு செய்து, கருகிய வாழைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை எவ்வித இழுத்தடிப்பும் இன்றி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க வேண்டும் என்றும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெற்றுள்ள விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாசன நீர் முறையாகப் பகிர்ந்தளிக்கப்படாததற்கும், கடைமடை பகுதிகளுக்கு உரிய அளவு தண்ணீர் திறந்துவிடப்படாததற்கும் காரணமான பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மீது துறைசார் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

உழவர்களின் நியாயமான கண்ணீருக்கும், கொந்தளிப்புக்கும் மதிப்பளித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ