தமிழக காவல் நிலையங்களில் சி.சி.டி.வி பதிவுகள் எத்தனை நாட்கள் பாதுகாக்கப்படும் - உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்திற்கு பாதுகாக்கப்படுகின்றன என்பது தொடர்பாக தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சே
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்திற்கு பாதுகாக்கப்படுகின்றன என்பது தொடர்பாக தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு எதிராக ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், சி.எஸ்.சி.ஐ.டி. உதவி ஆய்வாளர் சரவணகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், அந்த அலுவலகத்தில் தற்போது 15 நாட்களுக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை நீண்டகாலம் பாதுகாக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 18 மாதங்களுக்கு பதிலாக வெறும் 15 நாட்களுக்கான பதிவுகள் மட்டுமே பராமரிக்கப்படுவது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தமிழக காவல் நிலையங்களில் சிசிடிவி பதிவுகளை குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 18 மாதங்கள் வரை பாதுகாக்க வேண்டும் என முன்னதாக நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் இருந்துள்ளன.

இதுகுறித்து தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்திற்கு பராமரிக்கப்படுகின்றன என்பது தொடர்பாக தமிழக டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam