Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை–கும்பகோணம்–தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை திட்டத்தில், விக்கிரவாண்டி–சேத்தியாத்தோப்பு இடையிலான சாலைப் பணிகள் 2027 ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, சேத்தியாத்தோப்பு, சோழபுரம் வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
விக்கிரவாண்டி–சேத்தியாத்தோப்பு இடையிலான 66 கி.மீ. சாலைப் பணிகள் நீண்ட காலமாக தாமதமாகி வந்த நிலையில், பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விக்கிரவாண்டி–சேத்தியாத்தோப்பு சாலைப் பணிகளுக்கான புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்தது.
கடந்த காலத்தில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் போதிய அளவில் பணிகளை முடிக்காததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சேத்தியாத்தோப்பு–சோழபுரம்–தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலைப் பணிகள் நிறைவடைந்து, சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டி–சேத்தியாத்தோப்பு பகுதியில் புதிய திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கத்துடன் ரயில்வே மேம்பாலங்கள், வாகன அடிப்பாதைகள் மற்றும் சிறு பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சென்னை–கும்பகோணம் நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கே.பாலு தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P