Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 04 செப்டம்பர் (ஹி.ச.)
தென்காசி அருகே ஆசாத் நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை என்பவரது வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அந்த வீட்டில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தின் வீரியத்தில் வீட்டின் பெரும்பகுதி பலத்த சேதமடைந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்களும் மீட்புப் பணிகளுக்கு உதவினர்.
இந்த விபத்தில் பாலசவுந்தர்யா, கீர்த்திகா ஆகிய 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட மீட்புப் படையினர், சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்ததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், விபத்து ஏற்பட்ட வீட்டை பார்வையிட்டு தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வெடிபொருட்கள் அங்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டன, சட்டவிரோதமாக தயாரிப்பு நடைபெற்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளில் பொதுமக்களுடன் இணைந்து ஈடுபட்டனர்.
மேலும், காயமடைந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த மாவட்ட செயலாளர், மருத்துவமனையில் குழந்தைகளின் குடும்பத்தினருடன் இருந்து வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P