Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர் 1992ஆம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் கடந்த 2014ஆம் ஆண்டு சிவகங்கை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், அந்த நபரை வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்கவில்லை. இதனை காரணமாகக் கொண்டு குடும்ப நல நீதிமன்றம் 2021ஆம் ஆண்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கணவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, தகாத உறவு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக்குக் காரணமான நபரை வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்காமல் இருப்பது வழக்கின் செல்லுபடியாகும் தன்மையை பாதிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, கீழமை நீதிமன்றம் வழக்கை அந்த அடிப்படையில் நிராகரித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
மேலும், கணவர் மும்பையில் பணிபுரிந்ததை திருமணக் கடமையை மீறியதாகக் கீழமை நீதிமன்றம் கருதியிருந்தது குறித்தும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. கணவர் எங்கு சென்றாலும் மனைவியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அணுகுமுறையை ஏற்க முடியாது என்றும், ராணுவ வீரர் போன்றோருக்கு குடும்பத்துடன் பணியிடத்தில் வசிப்பது சாத்தியமில்லாத சூழல்கள் இருப்பதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மனுதாரருக்கு தற்போது 67 வயதாகிறது என்றும், கணவரும் மனைவியும் கடந்த 16 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மனைவி மீண்டும் சேர்ந்து வாழ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும், இருவருக்கும் இடையிலான திருமண உறவு சீர்செய்ய முடியாத அளவுக்கு முறிந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
“நீண்ட காலப் பிரிவு, இணைந்து வாழாமை, அனைத்து தொடர்புகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலை மற்றும் இரு தரப்பினரிடையேயான கசப்புணர்வு ஆகியவற்றை திருமணக் கொடுமையாகக் கருதலாம்” என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பையும் நீதிபதிகள் மேற்கோள் காட்டினர்.
மேலும், இரு தரப்பினரும் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளின் தன்மையைப் பார்க்கும்போது, அவர்கள் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது என தெரிவித்தனர். இருவரையும் சமரசம் செய்து வைக்க நீதிமன்றம் மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை என்றும் கூறினர்.
“திருமண உறவு மீளமுடியாத வகையில் முறிந்துபோன நிலையில், நீண்ட காலப் பிரிவும் இணைந்து வாழாத நிலையும் தொடரும்போது, அத்தகைய திருமண உறவைத் தொடரச் செய்வது ஒருவருக்கொருவர் இழைத்துக்கொள்ளும் கொடுமைக்கு அங்கீகாரம் அளிப்பதாகவே அமையும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, 1992ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை கலைத்து கணவருக்கு விவாகரத்து வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, சிவகங்கை குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்தது. அதேவேளையில், மனைவிக்கு உரிய ஜீவனாம்சமாக ரூ.7 லட்சத்தை கணவர் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P