பள்ளி சாம்பாரில் சாணிப்பவுடர் கலக்க வைத்த வாலிபர் கைது
ஈரோடு, 04 செப்டம்பர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபைலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, குழந்தைகளுக்கான காலை உணவுத்
கைது


ஈரோடு, 04 செப்டம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபைலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளியில் உணவு தயாரிக்கப்பட்டது.

உணவின் தரத்தை பரிசோதிப்பதற்காக டம்ளரில் எடுத்து வைக்கப்பட்டிருந்த சாம்பாரை ஆசிரியர் ரேவதி பார்த்தபோது, அதில் மஞ்சள் தூளின் நிறம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சமையல் பணியாளரிடம் விசாரிக்க வேண்டும் என அவர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளியில் சமையல் பணியில் இருந்த பொன்னம்மாவிடம் தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தினார். அப்போது, தாம் அளவாகத்தான் மஞ்சள் தூள் சேர்த்து சாம்பார் தயாரித்ததாக பொன்னம்மா தெரிவித்தார்.

சாம்பாரின் நிறம் வழக்கத்திற்கு மாறாக அதிக மஞ்சள் நிறத்தில் இருந்ததால் சந்தேகமடைந்த பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தியது. அப்போது, 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அருகிலுள்ள மளிகைக் கடையில் சாணிப்பவுடரை வாங்கி வந்து, ஆசிரியர்கள் சுவைத்துப் பார்ப்பதற்காக டம்ளரில் எடுத்து வைக்கப்பட்டிருந்த சாம்பாரில் கலந்தது தெரியவந்தது.

அந்த மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சாணிப்பவுடரை வாங்கி வந்து சாம்பாரில் கலக்குமாறு கூறியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் குமுதா, ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செப்டம்பர் 2-ஆம் தேதி சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆறுமுகத்தின் மனைவி ஏற்கனவே அந்தப் பள்ளியில் சமையல் பணியில் ஈடுபட்டு வந்ததும், அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு வேறு ஒருவர் புதிதாக சமையல் பணிக்கு நியமிக்கப்பட்டதால் பள்ளி நிர்வாகத்தின் மீது ஆறுமுகத்திற்கு கோபம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக மாணவியிடம் சாணிப்பவுடரை வாங்கி வரச் செய்து, ஆசிரியர்கள் பரிசோதனைக்காக வைத்திருந்த சாம்பாரில் கலக்க வைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படவிருந்த சாம்பார் தொடர்பாக நடந்த இந்தச் சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam