Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 04 செப்டம்பர் (ஹி.ச)
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் ஆலங்குடி தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சர் ஆகவும் பதவி வகித்தவர்.
இவர் கடந்த 2010 அக்டோபர் 7 ந் தேதி அவரது வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவரது குடும்பத்தினர் சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்துள்ளனர்.
இதில் அவரது மகன் அ.தி.மு.க மாநில ஜெ பேரவை துணைச் செயலாளர் ராஜபாண்டியன் அவரது தம்பி ராஜராஜனுக்குக் கொடுத்த சொத்தில் நுழைய விடாமல் தடுத்து வந்ததாகக் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராஜராஜன் குடியிருந்த வீட்டில் இருந்த பொருட்களை அள்ளி வெளியே வைத்து விட்டு வீட்டை ராஜபாண்டியன் பூட்டிவிட்டதால் ராஜராஜன் குடும்பத்தினர் பல நாட்கள் வீட்டு வாசலிலேயே குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளனர். இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என ராஜராஜன் மனைவி மற்றும் குழந்தைகள் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையில் தான் பூட்டப்பட்ட வீட்டை நீதிமன்ற மூலம் மீண்டும் திறக்க நீதிமன்ற உத்தரவு பெற்ற ராஜராஜன் வீட்டைத் திறந்து சுத்தம் செய்த போது எதிர் வீட்டில் இருந்த ராஜபாண்டியன் கத்தியை எடுத்துக்கொண்டு விரட்டியதால் தப்பி ஓடி அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் பதுங்கிய ராஜராஜனைச் சரமாரியாகக் கத்தியில் குத்தி விட்டு சிலிண்டரையும் தூக்கி தலையில் போட்டு விட்டார். இதில் ராஜராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்து தப்பிச் சென்ற ராஜபாண்டியன் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜராஜன் மனைவி சுபிதா வடகாடு காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், தனது கணவர் ராஜராஜன் படுகொலைக்கு ராஜபாண்டியன் மட்டும் காரணம் இல்லை. அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரும் காரணம் என 7 பெயர்களைப் புகாரில் எழுதிக் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து வடகாடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் தான் ராஜராஜன் உடலை வாங்குவோம் என்றும் இராஜராஜன் தரப்பினர் கூறியுள்ளனர். அதனால் 7 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b