ஜிசாட்-1A செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்-17
ஸ்ரீஹரிகோட்டா, 04 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் இன்று அதிகாலை 2.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ஜிசாட்-1ஏ
ஜிசாட்-1A செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்-17


ஸ்ரீஹரிகோட்டா, 04 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் இன்று அதிகாலை 2.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ஜிசாட்-1ஏ என்று அழைக்கப்படும் இஓஎஸ்-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இது வழக்கமாக செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படும் குறைந்த புவி சுற்றுப்பாதை அல்லாமல், பூமியில் இருந்து சுமார் 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள புவிசார் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து பூமியை தொடர்ந்து படம் பிடிக்கும் நாட்டின் முதல் அதிநவீன இமேஜிங் செயற்கைக்கோள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு அனுப்பப்பட்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஒரு பகுதியை கடந்து சென்று படம் பிடிக்கும் நிலையில், இந்த புதிய செயற்கைக்கோள் இந்திய துணைக்கண்டத்தை 24 மணி நேரமும் தொடர்ச்சியாகவும், நிகழ்நேரத்திற்கு அருகிலும் கண்காணிக்கும் திறன் கொண்டது.

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளில் பெரும் புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளம், புயல், நிலச்சரிவு, காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது அவற்றின் நகர்வை உடனுக்குடன் கண்காணித்து, முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்கவும், பாதிப்புகளை மதிப்பிடவும் இந்த செயற்கைக்கோள் பெரிதும் உதவும்.

Hindusthan Samachar / vidya.b