GSLV-F17 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டி.டி.வி தினகரன் வாழ்த்து
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 செயற்கைக்கோளை செப்டம்பர் 4 அதிகாலை 2:55 மணிக்கு வெற்றிகரமாக
TTV Dhinakaran


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 செயற்கைக்கோளை செப்டம்பர் 4 அதிகாலை 2:55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

புதன்கிழமை இரவு 11:30 மணிக்கு தொடங்கிய 27 மணி நேர கவுண்ட்டவுன் முடிந்ததும், 51.7 மீட்டர் உயரமும், 420.5 டன் எடையும் கொண்ட 3 நிலைகளைக் கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் திட்டமிட்டபடி நள்ளிரவில் சீறிப்பாய்ந்தது.

லேசான மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் இந்த வரலாற்று நிகழ்வைக் கண்டு களித்தனர்.

2,367 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், புவி ஒத்திசைவு மாற்றச் சுற்றுப்பாதையில் (Sub-GTO) துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில்,

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து GSLV F-17 ராக்கெட்டின் மூலம் EOS-05 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் வெற்றிப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN