Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 04 செப்டம்பர் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத்தில் பணியாற்றி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
வரும் வாரங்களில் மேலும் 713 தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக நவம்பர் பாதியிக்குள் 1,060 தொழிலாளர்கள் வரை வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆ. அருண்மொழிதேவன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிநீக்க நடவடிக்கையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆ.அருண்மொழிதேவன் தலைமையில் நாளை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
நெய்வேலி சுரங்கம் அருகே நடைபெறும் இந்த போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வரை போராட்டம் தொடரும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b