Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 04 செப்டம்பர் (ஹி.ச.)
முல்லை நிலத்தின் இறைவனாகவும், ஆயர் குலத்தின் தலைவனாகவும் விளங்கிய மாயோனின் பெருமையைப் போற்றும் நாளாக மாயோன் பெருவிழா கொண்டாடப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தொல்காப்பியத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள சீமான், குறிஞ்சி மற்றும் மருத நிலங்களுக்கு இடைப்பட்ட முல்லை நிலத்தில் வாழ்ந்ததன் காரணமாகவே தங்கள் மக்கள் ‘இடையர்கள்’ என அழைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
ஆனால், ‘கோன்’, ‘ஆயர்’ என்பதே தங்களின் குடிப்பெயர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முல்லை நிலத்தின் தலைவன் கையில் பெரிய கோலை ஏந்தி நின்றதால் ‘கோன்’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும், பின்னாளில் அதுவே அரசனின் கையில் செங்கோலாக மாறியதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலின் காரணமாக ‘மேய்ப்பர்கள்’, ‘ஆயர்கள்’ என அழைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆடு, மாடுகளை எண்ணுவதற்காகவே முதலில் எண்கள் உருவானதாகவும், திருவள்ளுவரின் திருக்குறளிலும் “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என எண்ணுக்கு முதன்மை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
மாயோன் பிற்காலத்தில் கண்ணன், திருமால், பெருமாள் என அழைக்கப்பட்டதாகக் கூறியுள்ள சீமான், ‘மால்’ என்றால் கருப்பு எனப் பொருள் என்றும், கருமேகம்போல் தோன்றி மழையைப் பொழிந்துவிட்டு மறைவதால் மாயவன், மாயோன் என அழைத்து வழிபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னாளில் ஆரியர்களின் வருகைக்குப் பிறகு மாயோன் கிருஷ்ணராக மாற்றப்பட்டதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் தொன்மையான வரலாற்றையும் பண்பாட்டையும் போற்றும் வகையில் ‘மாயோன் பெருவிழா’ கொண்டாடப்பட்டு வருவதாகத் தெரிவித்த சீமான், உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மாயோன் பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“எங்கள் இறைவன், ஆயர்குல தலைவன் மாயோன் பெரும்புகழ் போற்றி! போற்றி!” என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P