கூடுவாஞ்சேரி பிரியாணி அண்டா கொடூர கொலை வழக்கு - ஆக்ரா ரயில்வே போலீசுக்கு கடிதம் எழுதிய தமிழக போலீசார்
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச) சென்னையை உலுக்கிய கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக, கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை ஒப்படைக்கக் கோரி ஆக்ரா ரயில்வே போலீசாருக்கு கூடுவாஞ்சேரி போலீசார் அதிகாரப்பூர்வ கடிதம் எழுதியுள்ளனர
Kuduvancheri Biryani-Pot Murder Case


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச)

சென்னையை உலுக்கிய கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக, கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை ஒப்படைக்கக் கோரி ஆக்ரா ரயில்வே போலீசாருக்கு கூடுவாஞ்சேரி போலீசார் அதிகாரப்பூர்வ கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற சூட்கேஸில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து சக பயணிகள் அளித்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்த போது, அதில் தலை மற்றும் கைகள் இல்லாத நிலையில் பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இரண்டு கவர்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆக்ரா ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சூட்கேஸ் மீதிருந்த தடயங்கள் மற்றும் ரயில் பயண விவரங்களை வைத்து அந்த சூட்கேஸ் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து தமிழக போலீசாரின் உதவியுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

சிசிடிவி காட்சிகளில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அந்த சூட்கேஸை ரயிலில் வைத்துவிட்டு, பின்னர் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி செல்லும் மின்சார ரயிலில் பயணித்தது தெரியவந்தது. தொடர்ந்து கூடுவாஞ்சேரி ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அவர்கள் ஆட்டோவில் ஏறி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்த போது போலீசாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் சமையலறையில் இருந்த பிரியாணி சமைக்க பயன்படுத்தப்படும் பெரிய அண்டாவில் ரத்தக்கறை படிந்த மனித சதை துண்டுகளும், அண்டாவின் மேல் மூடியில் மைதா மாவு பூசப்பட்ட நிலையிலும் இருந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி, எலும்புகளை சூட்கேஸில் அடைத்து ரயில் மூலம் அனுப்பிவிட்டு, மீதமுள்ள சதை பகுதிகளை தடயத்தை அழிப்பதற்காக பிரியாணி அண்டாவில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்து அழிக்க முயன்றது விசாரணையில் அம்பலமானது.

கொலை செய்யப்பட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என்ற 38 வயது பெண் என்பது தெரியவந்துள்ளது. அவர் தாம்பரம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மணிப்பூரைச் சேர்ந்த பகபதி மாஜி மற்றும் மாணிக் லஸ்கர் என அடையாளம் காணப்பட்டு, தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில், ஆக்ரா ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மனித எலும்புகள் மற்றும் உடல் பாகங்களும், கூடுவாஞ்சேரி வீட்டில் கைப்பற்றப்பட்ட மனித சதை பாகங்களும் ஒரே நபருடையதா என்பதை உறுதி செய்யவும், மரபணு பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வு மேற்கொள்ளவும் அந்த உடல் பாகங்களை தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரி ஆக்ரா ரயில்வே போலீசாருக்கு கூடுவாஞ்சேரி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் கொலைக்கான காரணம் குறித்தும், தலைமறைவாக உள்ள உடலின் தலைப்பகுதியை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b