Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.5.76 லட்சம் அபராதம் விதித்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சொந்தக் கடலில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைது செய்து, சிறையில் அடைத்து லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பது தொடர்கதையாகிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கார்ப்பரேட் நண்பர்களின் வியாபார நலனுக்காக வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கையிடம் சென்று நமது மீனவர்களின் உரிமைக்காக ஒரு வார்த்தைகூட பேச மறுப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ரஷ்யா–உக்ரைன் போரை நிறுத்துவதாகப் பேசும் பிரதமர் மோடி, இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வதைக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏழை மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை மத்திய பாஜக அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டு, அவர்களை விடுவிக்கப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக தாயகம் அழைத்து வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ