மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ரூ.85.76 லட்சம் ரொக்கப் பணம், 106 கிராம் தங்கம் - ஆடி மாத உண்டியல் காணிக்கை
விழுப்புரம், 04 செப்டம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாத
Undiyal


விழுப்புரம், 04 செப்டம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி ஆடி மாத அமாவாசை தினமான கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் ஆடி அமாவாசை தினம் மற்றும் ஆடி மாதத்தில் கோயிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு கோயில் உண்டியலில் நேர்த்திக் கடனாக பக்தர்கள் செலுத்திய காணிக்கை வசூலை எண்ணும் பணி நடைபெற்றது.

கோயில் உதவி ஆணையர் சக்திவேல் கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் வளாகத்தில் உண்டியல் வசூலை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் ஏராளமான கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் ஆடி மாதத்தில் மட்டும் நேர்த்திக் கடனாக கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக 85 லட்சத்து 76 ஆயிரத்து 912 ரூபாய் ரொக்கப் பணம், 106 கிராம் தங்கம் மற்றும் 755 கிராம் வெள்ளி பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN