Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 04 செப்டம்பர் (ஹி.ச.)
பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் அதானி குழுமம் தனது தொழில் முதலீடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சாலை, துறைமுகம், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிமெண்டு, தரவு மையம் உள்ளிட்ட துறைகளில் சுமார் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அந்த குழுமம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதானி குழுமம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கமாக இருப்பதாகவும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்த நிறுவனத்துக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களிலும் அதானி குழுமத்தின் முதலீடுகள் கணிசமாக அதிகரித்து வருவது கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.42,700 கோடி
தமிழ்நாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழும நிறுவனங்கள் சார்பில் ரூ.42,700 கோடிக்கும் அதிகமான முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், 3 பம்ப்-ஸ்டோரேஜ் திட்டங்களுக்கு ரூ.24,500 கோடியும், மிகப்பெரிய அளவிலான தரவு மையம் அமைக்க ரூ.13,200 கோடியும், சிமெண்டு அரைக்கும் 3 ஆலைகளுக்கு ரூ.3,500 கோடியும் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
எரிவாயு வினியோகத் துறையிலும் ரூ.1,568 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
மேலும், சென்னை வெளிவட்டச்சாலையின் இயக்கம், பராமரிப்பு மற்றும் சுங்க வசூல் பணிகளுக்கான ஒப்பந்தத்தை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.2,511 கோடி நிதி ஏலத்தின் மூலம் பெற்றுள்ளது.
கேரளத்திலும் விரிவாக்கம்
கேரள மாநிலத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் 2-ம் கட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக கூடுதலாக ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் விழிஞ்சம் துறைமுகத்தில் அதானி குழுமத்தின் மொத்த முதலீடு சுமார் ரூ.30 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தையும் அதானி குழுமம் இயக்கி வருகிறது. கொச்சி அருகே கலமசேரியில் ரூ.600 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் தளவாடப் பூங்கா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கர்நாடகம், தெலுங்கானா
கர்நாடகத்தில் பெங்களூருவில் ஹெப்பால்-சென்ட்ரல் சில்க் போர்டு இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 16.75 கிலோமீட்டர் நீள சுரங்கச்சாலை திட்டத்துக்கு அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.22,267 கோடி குறைந்தபட்ச ஏலத்தொகையை சமர்ப்பித்துள்ளது.
இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதானி குழும நிறுவனங்களுடன் ரூ.12,400 கோடி மதிப்பிலான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் தரவு மையம், எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்புத்துறை உற்பத்தி உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசியல் எல்லைகளை கடந்து முதலீடு
பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்கள் தனியார் முதலீடுகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க முயற்சித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே அதானி குழுமத்தின் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் அந்த மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால், அதானி குழுமத்தின் முதலீடுகள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவை அல்ல என்பதும், பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் அந்த குழுமம் பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA