Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 04 செப்டம்பர் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டின் முன்பு, அவரை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அரசியல் குறித்து பேச வேண்டாம் என வலியுறுத்தி பேனர் வைக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ராமதாஸ் கடந்த மாதம் தனது 88-வது பிறந்த நாளில் அறிவித்திருந்தார். இதையடுத்து, தன்னை சந்திக்க வரும் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசியல் பேச வேண்டாம் என அவர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு தற்போது ‘அரசியல் பேச வேண்டாம்’ என்ற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாமக தொடர்பான அரசியல் விவகாரங்கள் குறித்து தன்னிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலமாக ஓய்வில் இருந்து வந்த ராமதாஸ், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை மீண்டும் சந்தித்து வருகிறார். தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை தொடர்ந்து சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN