Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பச்சிளங்குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் உச்சத்தில் இருப்பதாக முன்னாள் காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
குழந்தை கடத்தல் என்பது மனித சமுதாயத்தின் ஆணி வேரையே பாதிக்கும் குற்றம் என தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களில் எத்தனை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை மட்டும் அரசு தெரிவிக்காமல், இதுவரை கண்டுபிடிக்கப்படாத குற்றங்கள் எத்தனை, அவற்றின் விளைவுகள் என்ன என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றார்.
சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் குழந்தைகள் கடத்தல் அதிகளவில் நடைபெறுவதாகவும், காவல்துறையினர் இதுபோன்ற சம்பவங்களை முழுமையாக வெளியில் வராமல் மூடி மறைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கடத்தப்படும் குழந்தைகள் பிச்சை எடுக்க வைக்கப்படுவதாகவும், பெண் குழந்தைகள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்தார். மேலும், குழந்தைகளுக்கு போதைப்பொருட்கள் கொடுக்கப்படுவதாகவும், கடத்தப்படும் ஆண் குழந்தைகள் எதிர்காலத்தில் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களாக உருவாக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் கடத்தப்பட்டு இதுவரை கண்டுபிடிக்கப்படாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் 18 வயது வரையிலான பெண் குழந்தைகள் குறித்த ஆண்டு வாரியான புள்ளிவிவரங்களையும் அவர் வெளியிட்டார்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் தர்ம வைத்தியசாலைகள் உள்ளிட்ட இடங்களில் பெண் குழந்தைகள் அதிகளவில் கடத்தப்படுவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 12 குழந்தைகள் கடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய பொன் மாணிக்கவேல், குழந்தைகள் கடத்தலை சமூகத்தின் மீது இழைக்கப்படும் மிகப்பெரிய குற்றமாகக் கருதி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மக்கள் வரிப்பணத்தில் பல நூறு கோடி ரூபாய் செலவழித்து முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங்குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் குறைந்தபட்ச பாதுகாப்புகூட இல்லை என வேதனை தெரிவித்தார்.
“முதலமைச்சரின் ஆடம்பர பந்தா பாதுகாப்பை குறைத்து, குழந்தைகளின் பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டும்” என பொன் மாணிக்கவேல் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ