Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு அரசின் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கௌரவ ஆலோசகராக பிரபல ஊரக வளர்ச்சி சிந்தனையாளரும், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான க.பழனிதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தை மேலும் வலுப்படுத்தவும், ஊரக வளர்ச்சித் திட்டங்களை கள யதார்த்தத்துடன் செயல்படுத்தவும் அனுபவம் வாய்ந்த வல்லுநரின் ஆலோசனை தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பழனிதுரை, மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கௌரவ ஆலோசகராக மட்டுமின்றி, நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் ஆலோசகராகவும் இணைந்து செயல்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாக சீர்திருத்தம், பஞ்சாயத்து ராஜ் வலுப்படுத்துதல், ஊரக வளர்ச்சி திட்டங்களை மக்கள் பங்கேற்புடன் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் அவர் அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவார்.
மேலும் இந்த பதவிக்காலத்தில் அவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பூதியமாக வழங்கப்படும் என்றும் அரசு நிர்ணயித்துள்ளது.
பேராசிரியர் க.பழனிதுரை 34 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பணியாற்றி துறைத் தலைவர் முதல் துணைவேந்தர் வரை பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b