Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு இன்று தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துப் பதிவில் அவர்,
இறை வடிவங்களிலேயே மிகுந்த பன்முகத்தன்மை கொண்டவர் பரந்தாமன் ஸ்ரீகிருஷ்ணர் என்று குறிப்பிட்டுள்ளார். குழந்தையாக, நண்பனாக, தத்துவஞானியாக, தூதுவனாக, வழிகாட்டியாக என பல பரிமாணங்களில் அவர் மனித குலத்திற்கு வழிகாட்டியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கிருஷ்ணரின் வாழ்க்கையே ஒரு கீதை என்றும், அவர் வாழ்ந்து காட்டிய வழியே பகவத் கீதையின் சாரம் என்றும் ஆளுநர் அர்லேகர் தனது பதிவில் விவரித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் கிடைத்த பணியை, கிட்டிய பொறுப்பை முழு ஈடுபாட்டுடனும், கீர்த்தியுடனும் செய்வதே கிருஷ்ணர் காட்டிய தர்மநெறி என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தி என்பது வெறும் வழிபாட்டுத் திருநாள் மட்டுமல்ல, அது தர்மம், கர்மம், பக்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை உணர்த்தும் திருநாள் என்றும், இந்த புனித நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b