காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு - 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடல்
T
Tasmac


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகளை மூடி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக் கூடாது, மதுபானக் கடைகளில் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், உரிய விசாரணை நடத்தாமல் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பணியிடைநீக்கத்தை ரத்து செய்து, அவர்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதன் காரணமாக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டது.

முன்னதாக, மதுபாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை ஊழியர்கள் பெட்டி பெட்டியாக சேகரித்து திருவாரூரில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்துவதில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தங்களது கோரிக்கைகளை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ