முன் அறிவிப்பின்றி கடையடைப்பு செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மது விலக்குத்துறை அதிகாரிகள் ஆலோசனை
சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.) கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுதல், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை பு
Tasmac Protest


சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுதல், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 136 டாஸ்மாக் கடைகளில் முன் அறிவிப்பின்றி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சில பகுதிகளில் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என நிர்வாகம் ஏற்கனவே கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனை மீறியதாகக் கூறி பல்வேறு இடங்களில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முன் அறிவிப்பின்றி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்காலிக பணியிடைநீக்கம் செய்வதா அல்லது நிரந்தரமாக பணி நீக்கம் செய்வதா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாவட்ட வாரியாக போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் பெயர் மற்றும் பணி விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ