Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 04 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் டெல்லி பயணம் தொடர்பான ரகசிய பாதுகாப்பு தகவல்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறி, ‘தெலுங்கு ஸ்க்ரைப்’ என்ற எக்ஸ் கணக்கு நிர்வாகிகள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடந்த ஜூலை 13-ந் தேதி டெல்லி சென்றார். அவரது பயணத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ரகசிய தகவல்கள் அடங்கிய வயர்லெஸ் தகவல், முதல்-மந்திரியின் தனிச்செயலாளர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த தகவலில், முதல்-மந்திரியின் நிமிட வாரியான பயண அட்டவணை, அவருக்கு வழங்கப்பட்டுள்ள இசட் பிளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள், முதல்-மந்திரியின் தலைமை பாதுகாப்பு அதிகாரியின் அதிகாரப்பூர்வ செல்போன் எண் மற்றும் அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான ரத்த வகை உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ரகசிய தகவல்கள் அதே நாளில் ‘தெலுங்கு ஸ்க்ரைப்’ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் முதல்-மந்திரியின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவரங்கள் பொதுவெளிக்கு வந்ததாகவும், இது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக முதல்-மந்திரியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கே.பி. பிராங்க்ளின் கடந்த
ஜூலை 14-ந் தேதி போலீசில் புகார் அளித்தார். ரகசியமாக பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு தகவல்கள் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டதாக தெரிகிறது.
மேலும், இந்த தகவல்கள் அரசு நிர்வாகத்தில் உள்ள யாரேனும் அதிகாரிகளால் சட்டவிரோதமாக கசியவிடப்பட்டதா? அல்லது வேறு வழியில் பெறப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த புகாரின் அடிப்படையில் முதலில் கைரதாபாத் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்திய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு ‘தெலுங்கு ஸ்க்ரைப்’ எக்ஸ் கணக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்-மந்திரியின் டெல்லி பயணம் குறித்து செய்தி வெளியிட்டதற்காகவே தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
‘தெலுங்கு ஸ்க்ரைப்’ கணக்கில் ஏற்கனவே தெலுங்கானா அரசு மற்றும் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தொடர்பாக விமர்சன பதிவுகள் வெளியிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் இந்த எக்ஸ் கணக்கு தொடர்பான விவரங்களை வழங்குமாறு போலீசார் எக்ஸ் நிறுவனத்துக்கு யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, முதல்-மந்திரியின் பாதுகாப்பு தகவல்கள் எவ்வாறு கசிந்தன, அவற்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டது யார், இந்த தகவல்கள் உண்மையில் ரகசிய ஆவணங்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA