நான் எங்கும் செல்லவில்லை- காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கொண்டா சுரேகா
ஐதராபாத் , 04 செப்டம்பர் (ஹி.ச.) தெலங்கானா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கொண்டா சுரேகா, தனது பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வரும் பதிவுகளுக்கும் தனது குடும்பத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்
A


ஐதராபாத் , 04 செப்டம்பர் (ஹி.ச.)

தெலங்கானா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கொண்டா சுரேகா, தனது பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வரும் பதிவுகளுக்கும் தனது குடும்பத்தினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொண்டா சுரேகாவின் பெயரில் “விரைவில் பெரிய அறிவிப்பு”, “காத்திருப்புக்கு விரைவில் முடிவு” உள்ளிட்ட வாசகங்களுடன் சில பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த பதிவுகள் தனது கவனத்துக்கு வந்துள்ளதாகவும், அவற்றை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளின் விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

கொண்டா சுரேகாவின் மகள் சுஸ்மிதா, கடந்த மாதம் வாரங்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. முதல்-மந்திரியின் குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்ததாக தகவல் வெளியானது.

மேலும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் பரகாலா தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. ரேவூரி பிரகாஷ் ரெட்டிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியிருந்த நிலையில், அதற்கு சுஸ்மிதா எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தான் பரகாலா தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு கொண்டா சுரேகாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. தனது மகள் தெரிவித்த கருத்துகளுக்கு தன்னை பொறுப்பாக்க முடியாது என்று கொண்டா சுரேகா பதில் அளித்தார். ஆனால், அவரது விளக்கத்தில் கட்சி மேலிடம் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொண்டா சுரேகாவை அமைச்சரவையில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவை பிறப்பித்தார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை கொண்டா சுரேகா கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மேலிடத்துக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அழுத்தம் கொடுத்து தன்னை பதவியில் இருந்து நீக்க வைத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அமைச்சர் பொங்குலேட்டி சீனிவாச ரெட்டி மற்றும் எம்.பி. வேம் நரேந்தர் ரெட்டி ஆகியோர் இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, கொண்டா சுரேகா பா.ஜ.க.வில் இணையப்போவதாகவும், புதிய கட்சி தொடங்கப்போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தானும் தனது கணவர் கொண்டா முரளியும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், பா.ஜ.க.வில் சேரும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் எங்கும் செல்லவில்லை” என்று கொண்டா சுரேகா தெளிவுபடுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA