Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 04 செப்டம்பர் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு அருகிலுள்ள சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய சகோதரருக்குச் சொந்தமான சுமார் 7 ஏக்கர் தோப்பு உள்ளது.
அங்குள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
அப்போது, சேலத்தில் உள்ள தனது தோட்டத்தில் போர்வெல் மின் மோட்டாரின் ஒயரை திருடிச் சென்றுவிட்டதாகவும், எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும் எனவும் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிலுவம்பாளையம் தோட்டத்திற்கு நேரில் சென்ற போலீசார், திருட்டு நடந்த இடத்தை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
மர்ம நபர்கள் இரவு நேரத்தில் போர்வெல்லுக்கு செல்லும் மின் இணைப்பு வயர்களை அறுத்து திருடிச் சென்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் முதல்வரின் தோட்டத்திலேயே திருட்டு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b