Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 04 செப்டம்பர் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரேமா அம்மாள் (60). இவரது கணவர் ராமன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.
இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் சென்னை மற்றும் பெங்களூருவில் வசித்து வருவதால், பிரேமா அம்மாள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மாங்காய் தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால், வீட்டிற்கு வெளியே நின்று தனது பிள்ளைகளுடன் செல்போனில் பேசிவிட்டு பிரேமா அம்மாள் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அப்போது இருட்டில் மறைந்திருந்த முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் பிரேமா அம்மாளின் கை, கால்களை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
தன்னிடம் பணம் இல்லை என மூதாட்டி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரை தாக்கியதாகவும், பின்னர் காதில் அணிந்திருந்த கம்மல் மற்றும் கழுத்தில் இருந்த செயின் உள்ளிட்ட மொத்தம் 2.5 சவரன் நகைகளை பறித்துக் கொண்டதாகவும் தெரிகிறது.
மேலும், தாங்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியாமல் இருக்க வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த பிரேமா அம்மாள் கூச்சலிட்டதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டனர். அதிர்ச்சியடைந்திருந்த அவரை சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீசார், ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மர்ம நபர்களை பிடிக்க சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam