Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை–கும்பகோணம் நான்கு வழிச்சாலை திட்டத்தில், விக்கிரவாண்டி–சேத்தியாத்தோப்பு இடையிலான சாலைப் பணிகள் 2027 ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
மேலும், சேத்தியாத்தோப்பு–சோழபுரம்–தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சென்னை–கும்பகோணம் நான்கு வழிச்சாலைத் திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், பணிகள் நீண்ட காலமாக தாமதமாகி வருவதாகக் கூறி, அவற்றை விரைந்து முடிக்கக் கோரி பா.ம.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, விக்கிரவாண்டி–சேத்தியாத்தோப்பு பணிகளுக்கான புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2027 ஜூன் மாதத்துக்குள் பணிகள் நிறைவடையும் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உறுதி அளித்தது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ