பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1041 கன அடியாக அதிகரிப்பு - நீர்மட்டம் 51 அடியை தாண்டியது
ஈரோடு, 04 செப்டம்பர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டத்தின் ஜீவாதாரமாக திகழும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீலகிரி மலைப்பகுதி மற்றும் அட்டப்பாடி உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, பவானி ஆற்றில்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1041 கன அடியாக அதிகரிப்பு - நீர்மட்டம் 51 அடியை தாண்டியது


ஈரோடு, 04 செப்டம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டத்தின் ஜீவாதாரமாக திகழும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீலகிரி மலைப்பகுதி மற்றும் அட்டப்பாடி உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று வினாடிக்கு 1038 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 1041 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.24 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 105 அடி ஆகும். தற்போது அணையில் 4.7 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய நீர் இருப்பு குறைவாக இருந்தாலும், தற்போது நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவது விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதியும், கீழ்பவானி பாசனத்திற்காகவும் அணையிலிருந்து தற்போது 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் பவானி ஆற்றின் வழியாக 5 கன அடியும், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 200 கன அடியும் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவானிசாகர் அணை ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன ஆதாரமாகவும், பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b