Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 04 செப்டம்பர் (ஹி.ச.)
காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து கடந்த 24 மணி நேரத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகா மற்றும் கேரள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாகவும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் காரணமாகவும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக நேற்று வரை வினாடிக்கு 2,737 கன அடியாக இருந்த மாயனூர் கதவணைக்கான நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5,332 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி மாயனூர் கதவணையில் 628 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கதவணையின் மொத்த கொள்ளளவில் இது கணிசமான அளவு என்பதால், கரூர், திருச்சி மாவட்டங்களில் குடிநீர் தேவைக்கும், பாசனத்திற்கும் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையின் பாதுகாப்பு மற்றும் நீர்மட்டத்தை சீராக பராமரிக்கும் பொருட்டு, அணையிலிருந்து வினாடிக்கு 2,141 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கதவணையின் நீர்மட்டம் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா பாசன விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b