Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 05 செப்டம்பர் (ஹி.ச.)
வார இறுதி நாட்கள் என்பதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு திரண்டுள்ளதால், மலைப்பாதை முழுவதும் கடும் கூட்டம் காணப்படுகிறது.
வைகுண்டம் கியூ காம்ப்ளெக்ஸில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ள நிலையில், பக்தர்களின் வரிசை வெளிப்புற பகுதிகளுக்கும் நீண்டுள்ளது.
டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க சுமார் 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கியூ காம்ப்ளெக்ஸ் நிரம்பியதால், நடைபாதைகள் மற்றும் வெளிப்புற ரிங் ரோடு வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் குடிநீர், பால், சிற்றுண்டி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 68 ஆயிரத்து 374 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.
35 ஆயிரத்து 241 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
அன்றைய தினம் உண்டியல் மூலம் ரூ.4 கோடியே 3 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
திருமலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பயணத்தையும் தரிசனத்தையும் உரிய முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA