பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்து காங்கிரஸை பா.ஜ.க கடுமையான விமர்சனம்!
புதுடெல்லி, 05 செப்டம்பர் (ஹி.ச.) காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமைச்சரவையில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. பெண்களுக்கு அரசியலில் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வரும
Bjp Leader


புதுடெல்லி, 05 செப்டம்பர் (ஹி.ச.)

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமைச்சரவையில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

பெண்களுக்கு அரசியலில் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், அக்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதற்கு மாறான நிலை இருப்பதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுதான்ஷு திரிவேதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

காங்கிரஸ் தற்போது நான்கு மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர்கூட இல்லை என்றும், கேரளாவில் இரண்டு பெண் அமைச்சர்களும், தெலங்கானாவில் இரண்டு பெண் அமைச்சர்களும் இருந்த நிலையில், அவர்களில் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால், நான்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தற்போது மொத்தம் மூன்று பெண் அமைச்சர்கள் மட்டுமே உள்ளதாக சுதான்ஷு திரிவேதி கூறினார்.

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கூறும் கருத்துகளுக்கும், அவர்கள் ஆளும் மாநிலங்களின் நடைமுறைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக அவர் விமர்சித்தார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கீடு செய்யும் 2023ஆம் ஆண்டின் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருந்தது.

அதே வேளையில், இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மத்திய அரசு முன்நிபந்தனையாகக் கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தாமதப்படுத்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதை சுட்டிக்காட்டிய சுதான்ஷு திரிவேதி, தற்போது தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக கார்கே தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனக் கூறினார்.

மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மௌனம் காப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P