Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 05 செப்டம்பர் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததன் காரணமாகவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு சற்று தணிந்துள்ளதன் காரணமாகவும் கடந்த இரண்டு நாட்களாக 9,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 8,500 கன அடியாக குறைந்துள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்வரத்து குறைந்துள்ள போதிலும் ஆற்றில் நீரின் வேகம் சீராகவே உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும், ஆற்றின் மையப்பகுதிக்கு செல்வதற்கும் விதிக்கப்பட்ட தடை 21-வது நாளாக இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த மூன்று வாரங்களாக பரிசல் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பரிசல் ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயத்தில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்பு பணியில் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீர்வரத்து மேலும் குறைந்தால் மட்டுமே பரிசல் இயக்குவதற்கான தடை விலக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b