Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னைக்கும் மதுரைக்கும் இடையே கடந்த 68 ஆண்டுகளாக தொடர்ந்து இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா விமான சேவை வரும் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத் துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி,
தற்போது இந்த வழித்தடத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியன் ஏர்லைன்ஸ் காலத்தில் இருந்து, பின்னர் ஏர் இந்தியாவாக மாறிய பிறகும், சென்னை - மதுரை - சென்னை வழித்தடத்தில் இந்த விமானம் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. அடிக்கடி பயணம் செய்பவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகவும், கட்டணம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததால் பயணிகளுக்கு சாதகமானதாகவும் இந்த சேவை இருந்து வந்தது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்த வழித்தடத்தில் இருந்து விலகுவதால், சென்னை - மதுரை வழித்தடம் இனி இண்டிகோ நிறுவனத்தின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் வரும் சூழல் உருவாகியுள்ளது.
தற்போது இண்டிகோ நிறுவனம் மட்டும் இரு நகரங்களுக்கு இடையே தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது.
விமான சேவை ரத்துக்கு பயணிகள் எண்ணிக்கை குறைவு, இயக்குவது லாபகரமாக இல்லை போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும், அதனை பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கடுமையாக மறுக்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கூட சென்னையில் இருந்து மதுரைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 159 பயணிகள் வந்துள்ளனர், மறுமார்க்கமாக மதுரையில் இருந்து சென்னைக்கு சுமார் 70 பயணிகள் பயணித்துள்ளனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விமானம் தினமும் காலை 10.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 11.30 மணிக்கு மதுரை வந்தடைந்தது. மறுமார்க்கமாக நண்பகல் 12 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.10 மணிக்கு சென்னை சென்றடைந்தது.
சென்னை - மதுரை வழித்தடம் லாபகரமாக இல்லை என்று கூறும் ஏர் இந்தியா, மதுரை - பெங்களூரு இடையே விமானத்தை எப்படி லாபகரமாக இயக்க முடியும் என்று பயண முகவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து ஹைதராபாத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பல புதிய சேவைகளை ஏர் இந்தியா தொடங்கியுள்ள நிலையில், மதுரை ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்றும் மதுரை, சிவகாசி, காரைக்குடி பகுதி விமான பயண முகவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலாத் துறையினருக்கு உச்சபட்ச சீசன் ஆகும். தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு தென் தமிழகத்திற்கு வர திட்டமிட்டுள்ள பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருக்கலாம். விமான சேவை நிறுத்தப்படுவதால் அவர்கள் மதுரை பயணத்தை தவிர்க்கவோ அல்லது அதிக கட்டணம் காரணமாக வேறு இடங்களுக்கு மாறவோ வாய்ப்புள்ளதாக மூத்த சுற்றுலா கழக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த முடிவை ஏர் இந்தியா திரும்பப் பெற வேண்டும் எனவும், இந்த முக்கியமான வழித்தடத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தென் மாவட்ட எம்.பி.க்கள் மத்திய விமான போக்குவரத்து அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் பயண முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b