Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை திருவான்மியூரில் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கண் தான விழிப்புணர்வு பேரணியை சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கண் தானம் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.
கண் தானம் என்பது அன்னதானத்திற்கு இணையான சிறந்த தானம் எனக் குறிப்பிட்ட சௌமியா அன்புமணி, பார்வைக் குறைபாடு உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு கண் தானம் மூலம் உதவ முடியும் என்றார்.
ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கண் தானங்கள் கிடைத்தால்தான் தற்போதுள்ள தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
கண் தானம் செய்ய பதிவு செய்வதுடன், தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
ஒருவர் உயிரிழந்த பிறகு, குறிப்பிட்ட காலத்துக்குள் குடும்பத்தினர் கண்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தால்தான் தானத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நகர்ப்புறங்களைப் போலவே கிராமப்புறங்களிலும் கண் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மத நம்பிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால் சிலர் தயக்கம் காட்டுவதாகவும், தானம் செய்வது உயர்ந்த நோக்கம் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறினார்.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்கள் நினைவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாகவும், மற்றவர்களுக்கு ஊக்கமாகவும் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் கண் மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், பசுமைத் தாயகம் அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கண் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதே பசுமைத் தாயகத்தின் எதிர்பார்ப்பு என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN