Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையுடன் அரசு உரிமம் பெற்ற மதுபான பார் செயல்பட்டு வருகிறது.
இங்கு பார் ஊழியர்களாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சசிகுமார் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
நேற்று இரவு பார் சுத்தம் செய்வது மற்றும் பாத்திரம் கழுவுவது யார் என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த சசிகுமார் அருகில் இருந்த மதுபாட்டிலை எடுத்து சீனிவாசனின் தலையில் ஓங்கி தாக்கியதாக தெரிகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் எழுந்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அவர், பாரின் சமையலறைக்குள் சென்று சுருண்டு விழுந்துள்ளார்.
இதற்கிடையே சசிகுமார் பார் முழுவதையும் சுத்தம் செய்துவிட்டு, எதுவும் நடக்காதது போல் அங்கேயே படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சீனிவாசன் இரவு முழுவதும் சமையலறையிலேயே உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இன்று காலை 10 மணியைத் தாண்டியும் அவர் எழுந்திருக்காததால், சக ஊழியர்கள் சந்தேகமடைந்து புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சீனிவாசன் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே சீனிவாசன் உயிரிழந்தது தெரியாமல் சசிகுமார் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார் பணிகள் தொடர்பாக சக ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மதுபாட்டிலால் தாக்கி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ