நேபாள வெள்ளப் பேரிடரில் காணாமல் போன தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் - அடையாளம் காண தஞ்சை மருத்துவக் கல்லூரியில் டி.என்.ஏ. மாதிரி சேகரிப்பு தீவிரம்
தஞ்சாவூர், 05 செப்டம்பர் (ஹி.ச) நேபாளத்தில் திபெத் எல்லையோரம் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பேரிடரில், தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கைலாஷ் - மானசரோவர் யாத்ரீகர்கள் சிக்கியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில
DNA sample collection intensified


தஞ்சாவூர், 05 செப்டம்பர் (ஹி.ச)

நேபாளத்தில் திபெத் எல்லையோரம் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பேரிடரில், தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கைலாஷ் - மானசரோவர் யாத்ரீகர்கள் சிக்கியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்தைச் சேர்ந்த 11 பேர் மற்றும் தஞ்சாவூர் நகரைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 16 பேர் புனித யாத்திரைக்காக நேபாளம் சென்றிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் இவர்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பத்திரமாக மீட்கப்பட்டு ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த 16 பேருடனான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

இந்த சூழலில், நேபாளத்தில் மீட்கப்படும் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் பேரில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக காணாமல் போனவர்களின் பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் நெருங்கிய ரத்த உறவினர்களிடமிருந்து இன்று காலை முதல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சேகரிக்கப்படும் மாதிரிகள், நேபாளத்தில் மீட்கப்படும் உடல்களின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு பார்க்க மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ளன.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், நேபாள அரசு மற்றும் இந்திய வெளியுறவுத்துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து மீட்புப் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b