Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை மற்றும் திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்களுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக கோவை சிங்காநல்லூர் அருகே மாசக்காளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கே.என்.நேருவின் மற்றொரு சகோதரரான கே.என்.மணிவண்ணனின் அலுவலகம் மற்றும் இல்லத்தில் DVAC அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் முன்னாள் அமைச்சரின் மூத்த சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான சென்னை, திருச்சியில் உள்ள இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைக்கு பின்னணியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த டெண்டர் முறைகேடு தொடர்பான புகார் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சியில் கே.என்.நேரு அமைச்சராக இருந்த காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மொத்த ஒப்பந்த மதிப்பில் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக DVAC காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த FIR-ல் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக சுமார் 120 கோடி ரூபாய் வரை லஞ்சப் பணம் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் கட்சி நிதியாகவும் பெறப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதேபோல் அமலாக்கத்துறையினரும் டிவிஎச் குழுமத்துடன் தொடர்புடைய வங்கிக் கடன் மோசடி வழக்கில் நேருவின் சகோதரர்கள் இல்லங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று வரும் DVAC சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b