எடப்பாடியில் தொடரும் மின் வயர் திருட்டு - தனிப்படை விசாரணை தீவிரம்
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மின் வயர் திருட முயன்றதாக கூறப்படும் நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரர்
Hh


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மின் வயர் திருட முயன்றதாக கூறப்படும் நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோருக்குச் சொந்தமான நெடுங்குளம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில், ஆழ்துளைக் கிணறு மின் இணைப்பு மற்றும் மின்மோட்டாருக்குச் செல்லும் மின் வயர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வெட்டி திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் சிலுவம்பாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவான செல்போன் எண்கள் மற்றும் ஏற்கனவே மின் வயர் திருட்டில் ஈடுபட்டவர்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எடப்பாடி அருகே ஆவணியூர் பகுதியில் அதிமுக விவசாய அணி மாவட்ட துணைச் செயலாளர் மணியின் தோட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் மின் வயர் திருட முயன்றதாக கூறப்படும் நபரை பொதுமக்கள் பிடித்தனர்.

பின்னர் அவரை பூலாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், பிடிபட்டவர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் விவசாயக் கிணற்றில் நடைபெற்றதாக கூறப்படும் மின் வயர் திருட்டிலும் குமாருக்கு தொடர்பு உள்ளதா?

என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ