Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சூர், 05 செப்டம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் கேரளாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த கார் திருச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு 11.40 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக அதிவேகமாக மோதியுள்ளது. இந்த பயங்கர மோதலில் கார் முற்றிலும் நொறுங்கி சுக்குநூறானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த விஷ்வா, சூர்யா, சந்தோஷ், பிரசன்னா, யுவசஞ்சித் உள்ளிட்ட 7 மாணவர்களும், காரை ஓட்டி வந்த ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், நொறுங்கிய காருக்குள் சிக்கியிருந்த உடல்களை பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக திருச்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் விளக்குகள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த லாரியே விபத்துக்கு காரணமா அல்லது ஓட்டுநரின் தூக்கக் கலக்கமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
ஒரே கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b