ஓசூரில் ரூ.3 லட்சம் லஞ்ச வழக்கு- இடைத்தரகர் வீட்டில் 7 கிலோ தங்கம், ரூ.26 லட்சம் ரொக்கம் பறிமுதல்
கிருஷ்ணகிரி, 05 செப்டம்பர் (ஹி.ச.) கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சிவம்பட்டியைச் சேர்ந்த பிரதாப் (41), மேட்டூரைச் சேர்ந்தவர் மற்றும் குவாரி நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றிதழ் பெறுவதற்கா
தங்கம்


கிருஷ்ணகிரி, 05 செப்டம்பர் (ஹி.ச.)

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சிவம்பட்டியைச் சேர்ந்த பிரதாப் (41), மேட்டூரைச் சேர்ந்தவர் மற்றும் குவாரி நடத்தி வருகிறார்.

தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதிச் சான்றிதழ் பெறுவதற்காக அவர் ஓசூரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமனை அணுகியுள்ளார்.

அனுமதிச் சான்றிதழ் வழங்க ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் தொகை ரூ.10 லட்சமாக குறைக்கப்பட்டதாகவும், முதல் கட்டமாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, சேலத்தைச் சேர்ந்த இடைத்தரகர் சிவக்குமாரிடம் ரூ.3 லட்சத்தை வழங்குமாறு புருஷோத்தமன் கூறியதாக தெரிகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரதாப் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ரசாயனம் தடவிய ரூ.3 லட்சம் பணத்தை பிரதாப்பிடம் வழங்கிய லஞ்ச ஒழிப்புப் போலீஸார், அந்த பணத்தை இடைத்தரகரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதற்கிடையே, சிவக்குமார் ஓசூர் சென்றிருந்ததால், அவரது உதவியாளர் முருகனிடம் பணத்தை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் ஐந்து சாலை சந்திப்பு பகுதியில் செப்டம்பர் 2-ஆம் தேதி இரவு பிரதாப் ரூ.3 லட்சத்தை முருகனிடம் வழங்கியுள்ளார்.

அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் முருகனை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து சேலம் மற்றும் ஓசூரில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஓசூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. முருகனிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன், இடைத்தரகர் சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் முருகன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்குத் தொடர்புடைய வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 7 கிலோ தங்கம் மற்றும் ரூ.26 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam