முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) திமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திமுக ஆட்சியில
former Minister K.N. Nehru


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

திமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு அமைச்சராக இருந்த காலத்தில் அந்தத் துறையில் நடைபெற்ற டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் அபிராமபுரத்தில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரன் இல்லத்திலும், அவருக்குச் சொந்தமான TVH கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.

திருச்சியிலும் சோதனை தீவிரமடைந்துள்ளது. திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் வீட்டிற்கு நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதுதவிர சென்னையில் அடையாறு, அண்ணாநகர், திருவான்மியூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும், திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் என மொத்தம் 19 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், முன்னாள் அமைச்சர் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் இந்த அதிரடி சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b