Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஏற்பட்ட மோதலில், ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணநல்லூர் பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட மோதலில், மர்ம நபர் ஒருவர் கல்லால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு கொலையாளிகள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
குடிநீர் பிரச்சனைக்காகப் போராடிய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்டு, கொலையாளிகள் தப்பிச் செல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என விமர்சித்துள்ளார்.
மேலும், குழந்தைகள், பெண்கள், மக்கள் பிரதிநிதிகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையை தவெக ஆட்சி உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டிய கனிமொழி, இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து காவல்துறை முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ