குளத்துக்குள் பதுங்கி இருந்த ரவுடி கைது
பெங்களூரு, 05 செப்டம்பர் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதி ஹுட்டா காலனி பகுதியைச் சேர்ந்தவர் திலீப் என்ற கரியா (19). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், நீதிமன்ற
A


பெங்களூரு, 05 செப்டம்பர் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதி ஹுட்டா காலனி பகுதியைச் சேர்ந்தவர் திலீப் என்ற கரியா (19). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு எதிராக 3 முறை ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திலீப்பின் நடமாட்டம் குறித்து பத்ராவதி நியூ டவுன் போலீசாருக்கு கடந்த புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், திலீப்பை கைது செய்வதற்காக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் தன்னை பிடிக்க வந்ததை பார்த்த திலீப், அங்குள்ள அனந்தா பள்ளி அருகே புதர்கள் மண்டிக்கிடந்த பாழடைந்த குளத்துக்குள் குதித்து தப்ப முயன்றார். பின்னர் போலீசாரின் கண்களில் சிக்காமல் இருப்பதற்காக, குளத்து நீருக்குள் புதர்களுக்கு நடுவே முழுமையாக மூழ்கி பதுங்கிக் கொண்டார்.

அவ்வப்போது சுவாசிப்பதற்காக மட்டும் தலையை தண்ணீருக்கு மேலே கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

மகாபாரத போரின் இறுதியில் துரியோதனன் ஏரிக்குள் பதுங்கியிருந்ததைப் போல, போலீசாரிடம் இருந்து தப்பிக்க திலீப் குளத்துக்குள் பதுங்கியிருந்தார்.

இதற்கிடையே, குளக்கரையில் போலீசார் தீவிரமாக தேடுதல் நடத்தினர். அப்போது தண்ணீருக்குள் புதர்கள் அசைவதையும், ஆங்காங்கே நீர் குமிழ்கள் மேலே வருவதையும் போலீசார் கவனித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், திலீப் குளத்துக்குள் பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் தலைமை போலீஸ்காரர் பிரசன்னா ஆகியோர் சற்றும் தயங்காமல் குளத்துக்குள் குதித்தனர். பின்னர் நீருக்குள் புதர்களுக்கு நடுவே பதுங்கியிருந்த திலீப்பை மடக்கிப் பிடித்து, தண்ணீரில் இருந்து வெளியே இழுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து திலீப்பை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

16 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி, போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக குளத்துக்குள் பதுங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA