பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் சதுர்த்தி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவிலில், விநாயகர் சதுர்த்தி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும்
Kar


சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவிலில், விநாயகர் சதுர்த்தி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் சதுர்த்தி பெருவிழாவின் முதல் நாளான இன்று, கோவில் வளாகத்தில் ஆகம விதிப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகரத்தார்கள், கிராம மக்கள் இணைந்து பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவில் அறங்காவலர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், விழாவிற்கு வரும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறிப்பாக குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக கற்பக விநாயகரை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சதுர்த்தி பெருவிழா ஆகம விதிப்படி சிறப்பாக நடைபெறுவதற்காக, கோவில் தலைமை குருக்கள் பிச்சை குருக்கள், சோமசுந்தரம் குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். விழாவில் 50 சிவாச்சாரியார்கள் பங்கேற்று பூஜைகள் மற்றும் சடங்குகளை ஆகம விதிப்படி நடத்த உள்ளனர்.

மேலும், அறங்காவலர் குழுவினருடன் இணைந்து இந்து சமய அறநிலையத்துறையினரும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சதுர்த்தி பெருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறங்காவலர்கள் தெரிவித்தனர்.

விழா ஏற்பாடுகளுக்கு காவல்துறையினர், ஊடகத்துறையினர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் சதுர்த்தி பெருவிழா தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ