Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், தவெக அரசை தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இன்று சென்னை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 19 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சோதனைகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் வேலைக்கு பணம் பெறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கனிமொழி தனது எக்ஸ் பதிவில்,
சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் தவெக அரசு தொடர்ந்து அவதூறுகளையும், திசைதிருப்பல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்று கே.என். நேருவை பழிவாங்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மிரட்டல்களுக்கும், சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.க. அல்ல என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கே.என். நேரு தொடர்பான சோதனைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சியினரை குறிவைத்து விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam