Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 05 செப்டம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரை புலி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விளைநிலத்தில் பணியில் இருந்தவர்களை புலி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் உடனடியாக தனிப்படை அமைத்து தேடுதல் பணியை தொடங்கினர்.
அந்த வகையில் இருவரை அடுத்தடுத்து கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி இன்று 16-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புலியை பிடிக்க கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வன உயர் அடுக்கு படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 130 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு தகவலின்படி களத்தில் 150 வனத்துறையினர் வரை குவிக்கப்பட்டுள்ளனர்.
புலி நடமாடும் என சந்தேகிக்கப்படும் 8 முக்கிய இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தேயிலை தோட்டங்கள் அடர்ந்த இப்பகுதியில் புலி தொடர்ந்து போக்கு காட்டி வருவதால், கும்கி யானைகளை கொண்டு தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று, மதியம் 2:30 மணிக்கு ஓவேலி சாலை கெவிபாரா பகுதியில், புலியை பார்த்த சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில், டிரோன் கேமரா உதவியுடன் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், புலி லாரஸ்டன் வட்டபாறை ஒட்டிய கோக்கால் மலையில் இடம் பெயர்ந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, டிரோன் கேமராவில் பின் தொடர்ந்தனர். அதனடிப்படையில் வன ஊழியர்கள், கால்நடை டாக்டர்கள் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
ட்ரோன் கேமராக்கள் மூலமும், தேயிலை செடிகளுக்கு இடையே நடந்தும் வனத்துறையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். எனினும் புலி சிக்காமல் தப்பி வருவதால் ஓவேலி, கூடலூர், புத்தூர்வயல், விமலகிரி, மார்த்தோமா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.
மனித - வனவிலங்கு மோதல் அதிகமுள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் யானை, புலி தாக்குதல்களுக்கு 12 பேர் பலியாகியுள்ள நிலையில், இந்த ஆட்கொல்லி புலியை விரைந்து உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Hindusthan Samachar / vidya.b