Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 05 செப்டம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில், பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வருகின்றன. இதனால் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் மீட்புக் குழுவினராலும், தீயணைப்புத் துறையினராலும் உள்ளே செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்த வெடி விபத்தின் காரணமாக பட்டாசு ஆலையின் ஒரு அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் ஆலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
இந்த சம்பவத்தில் மீனாபட்டியைச் சேர்ந்த தொழிலாளி மாடசாமி என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b