மரகதச் சிலை திருட்டு வழக்கில் திருப்பம்- கோவில் பிரகாரத்தில் முகமூடி அணிந்து சுற்றிய மர்ம நபர்கள்
செங்கல்பட்டு, 05 செப்டம்பர் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருக்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற நடுபழனி என அழைக்கப்படும் ஸ்ரீ மரகத பால தண்டாயுதபாணி முருகன் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதச் சிலை திருடப்ப
முருகன் சிலை


செங்கல்பட்டு, 05 செப்டம்பர் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருக்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற நடுபழனி என அழைக்கப்படும் ஸ்ரீ மரகத பால தண்டாயுதபாணி முருகன் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகதச் சிலை திருடப்பட்ட சம்பவத்தில் தற்போது முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

கோவிலுக்கு வெளியேயும், கோவில் பிரகாரத்திலும் இரண்டு மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி நள்ளிரவில் நடமாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகளை கைப்பற்றியுள்ள தனிப்படை போலீசார், அதன் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இக்கோவிலின் மூலவராக சுமார் 2¼ அடி உயரம் கொண்ட முழுமையான பச்சை நிற மரகதச் சிலை அருள்பாலித்து வந்தது. மாவட்டத்திலேயே மிகவும் அரிதானதாகக் கருதப்படும் இந்தச் சிலையை தரிசிக்க பங்குனி உத்திரம், தைப்பூசம், சஷ்டி உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து காவடி எடுத்தும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர்.

விலைமதிப்பற்ற மரகதச் சிலைக்கு பாதுகாப்பாக மூலவர் சன்னதிக்குச் செல்லும் வழியில் மூன்று பெரிய இரும்புக் கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், மலைக்கோவில் என்பதால் எச்சரிக்கை மணி மற்றும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி மூன்று கதவுகளின் பூட்டுகளையும் உடைத்து, மூலவர் சன்னதியில் இருந்த மரகதச் சிலையை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி தலைமையில் 6 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், விசாரணையில் முக்கிய திருப்பமாக, திருட்டு நடைபெற்ற நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி கோவில் பிரகாரத்தில் சுற்றித் திரியும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P