Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 05 செப்டம்பர் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோவில்குளம் பகுதியில், நதி உன்னி கால்வாய் பாசனத்தை நம்பி கார் சாகுபடி செய்த விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், கடைமடை பகுதிகளுக்கு போதிய நீர் சென்றடையாததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
போதிய மழை இல்லாததால் அணைகளின் நீர்வரத்து குறைந்து, நீர்மட்டமும் சரிந்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கால்வாயில் போதிய அளவு தண்ணீர் வராததால் கடைமடை விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, சுமார் 60 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தை எட்டியுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
“அணையில் தண்ணீர் திறந்தால் மட்டும் போதுமா? அந்த தண்ணீர் கடைமடை வயல் வரை சென்றால்தானே விவசாயம் காப்பாற்றப்படும்?” என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
கால்வாய்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி, தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு, கடைமடை பகுதிகளுக்கு தடையின்றி தண்ணீர் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் பல மாத உழைப்பில் கதிர் வரும் நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால், அரசு உடனடியாக தலையிட்டு நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ