Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 05 செப்டம்பர் (ஹி.ச.)
'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள அவரது கொள்ளுப்பேத்தி செல்வியின் இல்லத்தில் வ.உ.சி.யின் திருவுருவப் படத்திற்கு இன்று மாலை அணிவித்துச் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன், முன்னாள் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் முருகானந்தம், மோனிஷா, மாரிச்செல்வம், ஜவகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வ.உ.சி.யின் கொள்ளுப்பேத்தி செல்வி பேசியதாவது:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை 'வழக்கறிஞர் தினமாக' அரசு அறிவித்து அனுசரிக்க வேண்டும். இது அவருடைய குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் நீண்ட காலமாக முன்வைத்து வரும் கோரிக்கையாகும்.
வ.உ.சி.யின் பிறந்த இல்லம் அமைந்துள்ள ஒட்டப்பிடாரத்தில் அவருக்கு மிகப்பிரம்மாண்டமான முறையில் மணிமண்டபம் கட்டப்பட வேண்டும்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அனைத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதாரர்கள் சார்பாக இக்கோரிக்கைகளைத் தமிழக முதல்வரிடம் முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b